Soap oil making Business ideas in tamil:
வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம் . இதன் மூலம் நன்றாகச் சம்பாதிக்கலாம் .
Soap oil தயாரிப்பது எப்படி ?
ஒரு பிளாஸ்டிக் வாளியில் 4 லிட்டர் வடிகட்டிய நல்ல தண்ணீரில் காஸ்டிக் சோடா 100 கிராம் போட வேண்டும் . தண்ணீர் சூடாகும் . மற்றொரு வாளியில் 4 லிட்டர் வடிகட்டிய நல்ல தண்ணீரில் சோடா ஆஷ் ( வாஷிங் பவுடர் ) ஒரு கிலோ போட வேண்டும் . அதுவும் சூடாகும் . இன்னொரு வாளியில் 2 லிட்டர் நல்ல தண்ணீரில் யூரியா ஒன்றரை கிலோ போட வேண்டும் . தண்ணீர் குளிர்ந்து போகும் . 3 வாளி நீரையும் ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். அவை சம வெப்ப நிலையை அடையும் . 3 வாளிகளில் உள்ள நீரை ஒரு கேனில் கொட்டி கலக்க வேண்டும் , இன்னொரு வாளியில் சிலரி ஒரு கிலோ , ஒலிக் ஆசிட் 100 கிராம் கலக்க வேண்டும் . அதை கேனில் உள்ள கலவையில் கொட்டி எவர் சில்வர் கரண்டியால் நன்கு கலக்க வேண்டும் . நுரை பொங்கி வரும் . 2 மணி நேரம் காத்திருந்தால் நுரை வற்றி , சோப் ஆயில் கிடைக்கும் . அதில் நறுமண லிக்விட் 15 மிலி கலந்தால் சோப் ஆயில் தயார் . இதன் மூலம் 10 லிட்டர் சோப் ஆயில் கிடைக்கும் . உபயோகிக்கும் முறை : 200 மிலி சோப் ஆயிலில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும் . 10 முதல் 15 துணி வரை அரை மணி நேரம் ஊறவைத்து கையாலோ , வாஷிங்மெஷின் மூலமோ துவைக்கலாம் . துணி துவைக்க மட்டுமல்ல , பாத்திரம் கழுவ , தரை , கழிப்பறை , பாத்ரூம் , வாகனங்களைச் சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம் .
என்னென்ன தேவை ?
சிலரி , காஸ்டிக் சோடா , சோடா ஆஷ் , யூரியா , ஒலிக் ஆசிட் , பெர்ப்யூம், சிறுதொழில் செய்யலாம் ... சிறப்பாக வாழலாம் .... தண்ணீர் . இவை அனைத்தும் கடைகளில் கிடைக்கிறது . இந்த தொழில் செய்ய பெரிய முதலீடு தேவைப்படாது . மேலும் பெரிய அளவில் இடவசதியும் தேவை இல்லை . மூலப் பொருட்கள் , தயாரித்த சோப் ஆயில்கள் இருப்பு வைக்க வீட்டுக்குள் பாதுகாப்பான சிறு இடம் போதுமானது .
மூலிகை எண்ணெய் தயாரிப்பு:
கூந்தல் வளர்ச்சிக்காக தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது . ஆண்களும் முடிகொட்டுதல் போன்ற பிரச்னைகளுக்காக மூலிகை எண்ணெய்களைப் பயன்படுத்துகிறார்கள் . பெரிய பிராண்ட் நிறுவனங்கள் போட்டிக் களத்தில் இருந்தாலும் , தரமான மூலிகை எண்ணெய் தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் . தயாரிப்பது எப்படி ? தலா 50 கிராம் வெந்தயம் , சீரகம் , கஸ்தூரி மஞ்சள் , பூலாங்கிழங்கு , வெட்டி வேர் , விளாமிச்சை வேர் ஆகியவற்றை 24 மணி நேரம் ஊறவைத்து , தண்ணீர் வடித்து எடுத்து கொள்ள வேண்டும் . தலா 50 கிராம் கருவேப்பிலை , திருநீற்றுப் பச்சிலை , பொன்னாங்கண்ணி , கீழாநெல்லிவேர் , கரிசலாங்கண்ணி , நெல்லிச் சாறு , செம்பருத்தி ஆகியவற்றைச் சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும் . 50 கிராம் கற்றாழை ஜெல் எடுத்து கொள்ள வேண்டும் . அனைத்தையும் ஆட்டு உரல் அல்லது கிரைண்டரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்க வேண்டும் . உளுந்த மாவு பதத்துக்கு வந்தவுடன் அதை வடை போல் தட்ட வேண்டும் . இரும்புச் சட்டியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் அதில் வடை போல் தட்டியதைப் போட வேண்டும் . அவை எண்ணெயில் வெந்து உதிரும் , சாறு முழுவதும் எண்ணெயில் இறங்கி கலந்து விடும் . எண்ணெய் ஈரப்பதம் இல்லாத நிலைக்கு மாறிவுடன் தீயை அணைத்து விட வேண்டும் . சூடு ஆறியதும் எண்ணெய்யை வடிகட்டி தகர டின்னில் ஊற்றினால் ஹேர் ஆயில் தயார் . எண்ணெய்யை தேவையான அளவுள்ள பாட்டில்களில் அடைத்து , லேபிள் ஒட்டி விற்கலாம் . கொதிக்கும் எண்ணெயில் வடைபோல் போட்டவற்றை முறுகும் வரை வேக வைத்து விட்டால் , வடையின் துகள்களே எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளும் . எண்ணெய் அளவு குறைந்து விடும் . முறுகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சீக்கிரமே தீயை அணைத்து விட்டால் முழுமையான மூலிகை எண்ணெயாக மாறாது . எண்ணெய் முழுவதும் மூலிகை எண்ணெயாக மாறிவிட்டதை அறிய , வடை வெந்து கொண்டிருக்கும் போது , ஒரு திரியை சட்டியில் உள்ள எண்ணெயில் நனைத்துப் பற்ற வைக்க வேண்டும் . எண்ணெய் ஈரப்பதமாக இருந்தால் சடசடவென சத்தம் வரும் . சரியாக எரியாது . திரி சத்தமில்லாமல் எரிந்தால் மூலிகை எண்ணெய்ப் பக்குவத்திற்கு வந்து விட்டது என்பதை அறிந்து உடனே தீயை அணைத்துவிடலாம் .
Buy contact:
காளான் வளர்ப்பு:
காளான் உணவுக்கு இன்று பெரும் வரவேற்பு இருக்கிறது . நட்சத்திர ஓட்டல்கள் தொடங்கி , சாட் அயிட்டம் விற்கும் கையேந்தி பவன்கள் வரை காளான் உணவுகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன . இவை தவிர காளான் சூப் கடைகளும் பெருகிவிட்டன . சைவம் , அசைவம் என்று இரு தரப்பினரும் ஒரு கட்டு கட்டும் அருமையான உணவு காளான் உணவு . நாக்கிற்கு நல்ல சுவையையும் , உடலுக்கு நல்லசத்தையும் தரும் காளானில் , வைட்டமின் சி மற்றும் டி அதிகளவில் உள்ளன . தாது வகைகளான இரும்புச்சத்து , கால்சியம் , பாஸ்பேட் , காப்பர் , பொட்டாசியம் போன்ற சத்துகளும் இதில் இருக்கின்றன . காளானில் பட்டன் காளான் , பால் காளான் , சிப்பிக் காளான் என பலவகைகள் இருக்கின்றன . இந்த மூன்று காளான்களைத்தான் மக்கள் சாப்பிடுகின்றனர் . இதில் சிப்பிக் காளான் வளர்ப்பது சுலபமானது . அதிக முதலீடு இல்லாமல் , விரைவில் தொழில் தொடங்க விரும்புபவர்கள் காளான் வளர்ப்புத் தொழிலை தேர்ந்தெடுக்கலாம் . பட்டன் காளானை மலைப்பிரதேசங்களில் மட்டும்தான் வளர்க்க முடியும் . சிப்பிக் காளான் , பால் காளான் இவற்றைச் சாதாரணமாக எல்லா இடங்களிலும் வளர்க்கலாம் . சிப்பிக்காளான் உற்பத்தி கடல் சிப்பியைப் போன்றுதோற்றமுடையதாய் இருப்பதால் சிப்பிக்காளான் என்ற பெயர் வந்தது . தரமான சிப்பிக் காளானை உற்பத்தி செய்ய அதனை சிறந்த முறையில் வளர்க்க வேண்டும் . சிறந்த மூலப்பொருட்கள் , சரியான வெப்பநிலை போன்றவை காளான் வளர்ப்புக்கு அத்தியாவசியமானதாகும் . 20 முதல் 25 சென்டிகிரேடு வரை வெப்பநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் . காளான் வளர்ப்பதற்கு நெல் வைக்கோலைக் கொண்டு உருளை படுக்கைகள் தயாரிக்க வேண்டும் . புதிய நெல் வைக்கோலை 5 செ.மீ.நீளத்திற்கு வெட்டி , 45 மணி நேரம் வரை நீரில் ஊறவைக்க வேண்டும் . பிறகு வைக்கோலை நன்கு கொதிக்கும் நீரில் ஒரு மணிநேரம் வேகவிட்டு எடுத்து உலர்த்திக் கொள்ள வேண்டும் . காளான் படுக்கை தயாரித்தல் பாலிதீன் பைகளில் அடுக்கு முறையில் காளான் விதையிடப்பட்ட படுக்கைகள் தயாரிக்கப்படவேண்டும் . பாலிதீன் பையின் அடிப்பகுதியை சணலால் கட்டி அதை உள்பக்கமாக திருப்பிவிட வேண்டும் . பையின் அடிப்பகுதியில் 5 செ.மீ. உயரத்திற்கு வைக்கோல் துண்டுகளை பரப்பி அதன் மேல் 30 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும்.பையின் வாய்பகுதியை சணலால் இறுக்க கட்டவேண்டும் . பாலிதீன் மையப்பகுதியில் 5-10 துளைகள் போடவேண்டும் . மேற்கூறிய முறையில் தயாரிக்கப்பட்ட உருளைப் படுக்கைகளை வயரில் கட்டி தொங்கவிட வேண்டும் . படுக்கையில் பூசண விதைகள் பரவுவதற்கு 15 நாட்கள் ஆகும் . பின் படுக்கைகளைக் காளான் தோன்றும் அறைக்கு மாற்ற வேண்டும் . காளான் பூசணம் முழுமையாகப் பரவி ஒரு வாரத்திற்குள் பையைக் கிழித்துக்கொண்டு வெளியே வரும் . காளான் மொட்டு தோன்றிய மூன்று நாட்களில் பெரியதாகிவிடும் . அவற்றை அறுவடை செய்த பின் பாலிதீன் பையை நீக்கிவிட வேண்டும் . அறையின் வெப்பநிலையையும் , ஈரப்பதத்தையும் சரியான அளவில் பராமரிக்க மணலில் தண்ணீர் தெளிக்க வேண்டும் . காளான் அறுவடை காளான்களை அறுவடை செய்தபின் படுக்கைகள் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும் . ஒரு வார இடைவெளியில் மீண்டும் காளான் அறுவடைக்கு வரும் . இதுபோல் 3 முறை அறுவடை செய்யலாம் . ஒரு படுக்கை தயார் செய்ய 500 கிராம் வைக்கோல் பயன்படுத்தினால் 900 கிராம் மகசூல் கிடைக்கும் . எவ்வளவு வளர்க்கிறோமோ அதற்கேற்ற வருமானம் இதில் கிடைக்கும் . வீட்டிலிருந்தபடியே வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள நினைப்பவர்களுக்கும் இது ஒரு மிகச்சிறந்த தொழிலாகும் . செலவும் மூலதனமும் மிகக் குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது.
வீட்டுக் காய்கறித் தோட்டம்:
அன்றாட வாழ்விற்கு தேவையான காய்கறிகளை வீட்டுக் காய்கறி தோட்டத்தில் , நம்மிடம் உள்ள சுத்தமான தண்ணீர் , சமையலறை மற்றும் குளியலறை கழிவு நீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம் . இதன் மூலம் , உபயோகமில்லாத தண்ணீர் தேங்கி நிற்பதையும் , இதனால் ஏற்படும் சுகாதாரக் கேட்டையும் , சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் தடுக்க முடிகிறது . பயனுள்ள வகையில் காய்கறி உற்பத்தியை மேற்கொள்ளமுடிகிறது . மிகக் குறைவான இடத்தில் சாகுபடி செய்யப்படுவதால் , மிக எளிதான முறையில் நோய் மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடிகிறது . மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை . நோய் மற்றும் பூச்சி தாக்கிய பகுதிகளை செடிகளில் இருந்து அகற்றினால் போதுமானதாகும் . இதனால் காய்கறிகளில் நச்சு ரசாயனங்கள் படிவதைத் தவிர்க்க முடிகிறது . காய்கறி தோட்டத்துக்கு வீட்டின் பின்புறத்தில் அல்லது முன்புறத்தில் இருக்கும் காலி இடத்தைத் தேர்வு செய்யலாம் . வீட்டின் சமையலறை மற்றும் குளியலறை கழிவு நீரைப் பயன்படுத்திக் கொள்ளவும் இது சுலபமாக இருக்கும் . காலியாக இருக்கும் இடத்தைப் பொருத்தும் , எத்தனை நபருக்கு காய்கறி தேவைப்படும் என்பதைப் பொருத்தும் காய்கறித் தோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய வேண்டும் . காய்கறித் தோட்டத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம் . ஆனால் முடிந்தவரை சதுரவடிவத்தைவிட செவ்வக வடிவ வீட்டுக்காய்கறித் தோட்டத்தை தேர்வு செய்யலாம் . சொந்த வீடாக இருந்தால் மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கலாம் . காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்து வேளாண் மையங்களை அணுகி தகுந்த வழிகாட்டுதல் பெறலாம் . அதன்படியே செயல்படலாம் . வீட்டுக்குத் தேவையான காய்கறி மற்றும் குடும்பத்திற்குத் தேவையான வருமானம் ஆகிய இரண்டு பயன்களும் வீட்டுக் காய்கறித் தோட்டத்தில் கிடைக்கிறது.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக