Mushroom Business in tamil | Business ideas in tamil | How to start business? | msne Chennai

 காளான் வளர்ப்பு:


காளான் உணவுக்கு இன்று பெரும் வரவேற்பு இருக்கிறது . நட்சத்திர ஓட்டல்கள் தொடங்கி , சாட் அயிட்டம் விற்கும் கையேந்தி பவன்கள் வரை காளான் உணவுகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன . இவை தவிர காளான் சூப் கடைகளும் பெருகிவிட்டன . சைவம் , அசைவம் என்று இரு தரப்பினரும் ஒரு கட்டு கட்டும் அருமையான உணவு காளான் உணவு . நாக்கிற்கு நல்ல சுவையையும் , உடலுக்கு நல்லசத்தையும் தரும் காளானில் , வைட்டமின் சி மற்றும் டி அதிகளவில் உள்ளன . தாது வகைகளான இரும்புச்சத்து , கால்சியம் , பாஸ்பேட் , காப்பர் , பொட்டாசியம் போன்ற சத்துகளும் இதில் இருக்கின்றன . காளானில் பட்டன் காளான் , பால் காளான் , சிப்பிக் காளான் என பலவகைகள் இருக்கின்றன . இந்த மூன்று காளான்களைத்தான் மக்கள் சாப்பிடுகின்றனர் . இதில் சிப்பிக் காளான் வளர்ப்பது சுலபமானது . அதிக முதலீடு இல்லாமல் , விரைவில் தொழில் தொடங்க விரும்புபவர்கள் காளான் வளர்ப்புத் தொழிலை தேர்ந்தெடுக்கலாம். பட்டன் காளானை மலைப்பிரதேசங்களில் மட்டும்தான் வளர்க்க முடியும் . சிப்பிக் காளான் , பால் காளான் இவற்றைச் சாதாரணமாக எல்லா இடங்களிலும் வளர்க்கலாம் . 

சிப்பிக்காளான் உற்பத்தி 

கடல் சிப்பியைப் போன்றுதோற்றமுடையதாய் இருப்பதால் சிப்பிக்காளான் என்ற பெயர் வந்தது . தரமான சிப்பிக் காளானை உற்பத்தி செய்ய அதனை சிறந்த முறையில் வளர்க்க வேண்டும் . சிறந்த மூலப்பொருட்கள் , சரியான வெப்பநிலை போன்றவை காளான் வளர்ப்புக்கு அத்தியாவசியமானதாகும் . 20 முதல் 25 சென்டிகிரேடு வரை வெப்பநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் . காளான் வளர்ப்பதற்கு நெல் வைக்கோலைக் கொண்டு உருளை படுக்கைகள் தயாரிக்க வேண்டும் . புதிய நெல் வைக்கோலை 5 செ.மீ.நீளத்திற்கு வெட்டி , 45 மணி நேரம் வரை நீரில் ஊறவைக்க வேண்டும் . பிறகு வைக்கோலை நன்கு கொதிக்கும் நீரில் ஒரு மணிநேரம் வேகவிட்டு எடுத்து உலர்த்திக் கொள்ள வேண்டும் . 


காளான் படுக்கை தயாரித்தல் பாலிதீன் பைகளில் அடுக்கு முறையில் காளான் விதையிடப்பட்ட படுக்கைகள் தயாரிக்கப்படவேண்டும் . பாலிதீன் பையின் அடிப்பகுதியை சணலால் கட்டி அதை உள்பக்கமாக திருப்பிவிட வேண்டும் . பையின் அடிப்பகுதியில் 5 செ.மீ. உயரத்திற்கு வைக்கோல் துண்டுகளை பரப்பி அதன் மேல் 30 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும்.பையின் வாய்பகுதியை சணலால் இறுக்க கட்டவேண்டும் . பாலிதீன் மையப்பகுதியில் 5-10 துளைகள் போடவேண்டும் . மேற்கூறிய முறையில் தயாரிக்கப்பட்ட உருளைப் படுக்கைகளை வயரில் கட்டி தொங்கவிட வேண்டும் . படுக்கையில் பூசண விதைகள் பரவுவதற்கு 15 நாட்கள் ஆகும் . பின் படுக்கைகளைக் காளான் தோன்றும் அறைக்கு மாற்ற வேண்டும் . காளான் பூசணம் முழுமையாகப் பரவி ஒரு வாரத்திற்குள் பையைக் கிழித்துக்கொண்டு வெளியே வரும் . காளான் மொட்டு தோன்றிய மூன்று நாட்களில் பெரியதாகிவிடும் . அவற்றை அறுவடை செய்த பின் பாலிதீன் பையை நீக்கிவிட வேண்டும் . அறையின் வெப்பநிலையையும் , ஈரப்பதத்தையும் சரியான அளவில் பராமரிக்க மணலில் தண்ணீர் தெளிக்க வேண்டும் . 

காளான் அறுவடை 

காளான்களை அறுவடை செய்தபின் படுக்கைகள் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும் . ஒரு வார இடைவெளியில் மீண்டும் காளான் அறுவடைக்கு வரும் . இதுபோல் 3 முறை அறுவடை செய்யலாம் . ஒரு படுக்கை தயார் செய்ய 500 கிராம் வைக்கோல் பயன்படுத்தினால் 900 கிராம் மகசூல் கிடைக்கும் . எவ்வளவு வளர்க்கிறோமோ அதற்கேற்ற வருமானம் இதில் கிடைக்கும் . வீட்டிலிருந்தபடியே வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள நினைப்பவர்களுக்கும் இது ஒரு மிகச்சிறந்த தொழிலாகும் . செலவும் மூலதனமும் மிகக் குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது. 

Publisher:

MSNE Chennai

கருத்துரையிடுக